காசிபாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா - 2013
சாட்டுதல்:
வருடம் தோறும் சித்திரை மாதம் வரும் திருவிழா ஒருவார சாட்டுதல் உடன் தொடங்கும். அந்த வகையில் இந்த வருடம் சித்திரை ஒன்றாம் தேதி, ஏப்ரல் (14-4-2013) ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியது. சாமி சாட்டியவுடன் காலை, மாலை பூஜையுடன் திருவிழா ஆரம்பமாகும்.
தன்னாசி பொங்கல்: (வெள்ளிகிழமை)
முற்காலத்தில் தன்னாசியாக வாழ்ந்த பெரியவரின் நினைவாக... முன்பொங்கலாக வெள்ளிகிழமை மாலை வைக்கபட்ட்டு பூஜிக்கபடுகிறது. அச்சமயத்தில்...... ஊர் சிறார்களும், சிறுமிகளும், விநாயகருக்கு குடம் குடமாக தண்ணீர் எடுத்து வந்து போட்டி போட்டுகொண்டு ஊத்துவார்கள். பொங்கல் பூஜை முடிந்தவுடன், அன்று இரவு இடைச்சியாயி மற்றும் மதுரை வீரன் சாமிகளுக்கு கிட வெட்டுதளுடன் பூஜை நடைபெறும். இந்த சாமிகளுக்கு வருடத்தில் ஒருமுறை மட்டுமே பூஜை நடைபெறும என்பது குறிப்பிடத்தக்கது.
காவடிக்கு செல்லுதல்:(சனிக்கிழமை)
சனிக்கிழமை இரவில் காவேரி ஆற்றுக்கு தீர்த்தம் எடுத்து வர.... காவடிக்கு புற்படுவார்கள். கிராமத்தில் பெரும்பாலும் விவசாய பணிகளே நடப்பதால் அதை பாதிக்காத வகையில் இரவில் சென்று காலையில் ஊர் வந்து விடுவார்கள்.
கும்பம் தாளித்து, காவடி அழைத்து, வடிசோறு மாவிளக்கு எடுத்தல்: (ஞாயிற்றுக்கிழமை)
ஊர் கிணற்றில் மண்பானையில் வேப்பிலை வைத்து மாரியம்மனின் திருவிழா கும்பம் சோடிக்கப்பட்டு பூஜை நடைபெற்று கோவிலினுள் சாமியின் சிலைக்கு அருகில் வைக்கப்படும். காவடிக்கு சென்றவர்கள் தீர்த்தம் எடுத்துவந்து மேக்கலூர் வேப்பமரத்தின் அடியில் வைத்து விடுவார்கள். பிறகு மாலையில் தான் காவடி அழைப்பு நடைபெறும். பறை சத்தம் காதை பிளக்க, விசில் சத்தம் ஊர் எங்கும் கேக்க, மேகாலூரில் இருந்து மாரியம்மன் கோவில் நோக்கி காவடி அழைத்து வரப்படும். காவடி கோவிலை அடைந்தவுடன், கொண்டு வந்த தீர்த்தத்தை சாமிக்கு விட்டு பூஜை நடைபெறும்.
காவடி பூஜை முடிந்தவுடன் அடுத்ததாக....... வடிசோருடன் மாவிளக்கு எடுத்துக்கொண்டு பெண்கள் கோவிலுக்கு வருவார்கள். வடிசோறு என்பது கருவாடும், கத்திரிக்காயும் போட்டு கொழம்பு வைத்து எடுத்து வரும் சாதம் ஆகும். மாவிளக்கு பூஜை காதை பிளக்கும் வெடி சத்தத்துடன், கண்கவரும் வாண வேடிக்கையுடனும் நடைபெறும். மாவிளக்கு பூஜை முடிந்தவுடன் சரித்திர நாடகம் நடைபெறும்.
பொங்கல் மாவிளக்கு (திங்கள்கிழமை )
காலையில் இருந்த மக்கள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்து கொண்டிருப்பார்கள். மாலையில் தோட்டி பொங்கல் அழைத்து வர ஊர் மங்கையர்கள் ஒன்று கூடி பொங்கல் வைப்பார்கள். எல்லோர் பொங்கலிலும் ஒரு அன்னம் எடுத்து சாமிக்கு வைத்து பூஜை செய்வார்கள்.
தொடர்ந்து அன்று இரவு பொங்கல் மாவிளக்கு எடுத்து வருவார்கள். அப்போது கண்கவரும் வாண வேடிக்கை நிகழ்த்தப்படும். பூஜை முடிந்தவுடன், அன்றைய இரவிலும் சரித்திர நாடகம் நடைபெறும்.
கரிநாள் (செவ்வாய்க்கிழமை)
கிட வெட்டு, அடசல் என ஊர் முழுவதும் அசைவ உணவுகளே சமைக்கபடுவதால் கரிநாள் என்றானது. அன்று இரவு கும்பம் கிணற்றில் விடும் நிகழ்வுடன் திருவிழா நிறைவடைகிறது.
அடுத்தநாள் புதன் கிழமை வரவு, செலவு கணக்கு, வழக்கு பார்த்து மறு பூஜை செய்யப்பட்டு அந்த வருட திருவிழா முழுவதுமாக நிறைவடைகிறது.
மேலும் புகைப்படங்களை காண...
மேலும் புகைப்படங்களை காண...